நடிகை அமலா பாலுடன் நிச்சயதார்த்தத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட, முன்னாள் நண்பருக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல திரைப்பட நடிகை அமலா பாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் பவ்னிந்தர் சிங் என்பவருக்கும் ராஜஸ்தானில் கடந்த 2019-ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
பின்னர், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் அமலா பாலுக்கும் தனக்கும் திருமணம் முடிந்துவிட்டதாகக் கூறி, நிச்சயதார்த்தத்தின் போது இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை, பவ்னிந்தர் சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். பின்னர், அமலா பாலின் எதிர்ப்பை தொடர்ந்து அந்தப் புகைப்படங்கள் நீக்கப்பட்டன.
இந்நிலையில், புகைப்படங்களை வெளியிட்ட பவ்னிந்தர் சிங்கிடம் நஷ்ட ஈடு கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலா பால் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், அமலா பாலின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட பவ்னிந்தர் சிங்குக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு டிசம்பர் 22 -ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் பவ்னிந்தர் சிங்குக்கு உத்தரவிட்டார்.