'பாஜகவிற்கு எதிராக அமைக்கப்பட்ட இந்த கூட்டணி நான்கு மாதங்களுக்கு மேல் நிற்காது' என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ''இப்பொழுது அவர்கள் அமைத்துள்ளது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. பாட்னாவில் 17 கட்சிகள் சேர்ந்துள்ளது. அடுத்து ஒரு மீட்டிங்கில் உதிரி கட்சிகள் எல்லாம் சேர்ந்து 30 முதல் 35 கட்சிகள் சேருவார்கள். ஆனால் இந்திய மக்கள் அனைவருக்குமே தெரியும் இந்த கூட்டணி என்பது சந்திரபாபு நாயுடு கொண்டுவர முயற்சி செய்தார். இப்படி வெவ்வேறு காலகட்டத்தில் தனி மனிதனுக்கு எதிராக பல கூட்டணி சேரும் பொழுது அது மூன்று நான்கு மாதங்களுக்கு மேல் நிற்காது.
இந்த கூட்டணி கூட 2024 தேர்தலுக்கு முன்னாடியே கலைந்து விடும். தொகுதிப் பங்கீடு என வரும் பொழுது இவர்கள் சண்டை போட ஆரம்பிப்பார்கள். அதனால் பெங்களூரில் நடைபெறப்போகின்ற இந்த மீட்டிங் பற்றி யாருக்கும் கவலை கிடையாது. எங்களுடைய நோக்கமெல்லாம் டெல்லியில் 18ஆம் தேதி ஜூலையில் நடக்கின்ற என்டிஏ கூட்டணியில் இந்தியாவினுடைய நல்லவர்கள், அரசியல் கட்சியினுடைய தலைவர்கள் எல்லோரும் வந்து கூட்டணியில் இருக்கப் போகிறார்கள். அந்த கூட்டணியைப் பார்க்கும் பொழுது தெரியும் உங்களுக்கு இந்தியா எந்த பக்கம் இருக்கிறது என்று. இவர்கள் பக்கம் இருப்பது சந்தர்ப்பவாதம் மட்டும்தான். இது நிலையான கூட்டணி இல்லை. அதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்'' என்றார்.