
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கூட்டணி நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், 'எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்’ என்று ஜெயலலிதா சூளுரைத்தார். அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் ஜெயலலிதாவின் பிறந்தநாள். அதிமுக தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் எஸ்.பி.வேலுமணி,தம்பிதுரை, வளர்மதி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஒவ்வொரு தொகுதியின் பொறுப்பாளர்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது மற்றும் வளர்ச்சிப் பணிகளை தீவிரப்படுத்துவது, கட்சியில் இளம் தலைமுறையினரை சேர்க்கும் பணிகளை விரைந்து முடிப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அதேநேரம் தேர்தலில் அமைக்கப்படும் கூட்டணி முடிவு, கட்சியின் தற்போதைய நிலை குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப் பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.