
அதிமுக பாஜக இடையே எந்த மனகசப்பும் கிடையாது, இந்த கூட்டணி தொடரும் என்று பாஜக தமிழக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இப்போதே கூட்டணி தொடர்பாக அதிமுகவின் கூட்டணி கட்சிகள் தினமும் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றன. "தனித்து நிற்கவே நாங்கள் விரும்புகிறோம், சசிகலாவின் வருகை அதிமுகவில் மாற்றத்தை ஏற்படுத்தும்" என தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார், இது அதிமுக தரப்பை சூடேற்றியது. பாமக தரப்பிலும் முதல்வர் மேல் அதிருப்தியில் இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது. இதையும் தாண்டி பாஜக தரப்பில் அதிமுக அரசை தொடர்ந்து சில முக்கிய நிர்வாகிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கடும் வார்த்தைகளை பயன்படுத்தி அதற்கு எதிர்வினையாற்றி வருகிறார். இந்நிலையில், கூட்டணி தொடர்பாக பேசிய பாஜக தலைவர் எல். முருகன் தமிழகத்தில் அதிமுக உடன் கூட்டணி தொடர்வதாகவும், எந்த மனக்கசப்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.