நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அதிமுக ஏற்கெனவே கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இன்று அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சி, எஸ்டிபிஐ, புரட்சி பாரதம் கட்சி, ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளுடன் இன்று கையெழுத்து ஒப்பந்தம் ஆகிறது.
ஏற்கெனவே அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருந்த பாமக திடீரென பாஜக கூட்டணிக்கு தாவியது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், தற்போது தேமுதிகவுடன் இன்று மீண்டும் அதிமுக இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒருவேளை இன்று தேமுதிகவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் இன்றே அதிமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நான்கு தொகுதிகளை தேமுதிகவிற்கு ஒதுக்குவதற்கு அதிமுக தயாராக இருந்த நிலையில் தற்போது தேமுதிகவிற்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன் வந்திருக்கிறது.