மதுரை - திருமங்கலம் அருகே மருது சேனை அமைப்பின் நிறுவனர் ஆதிநாராயணன் மீது நான்கு பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு வீசியதோடு, சுட்டுக் கொல்லவும் முயற்சித்துள்ளது.
இந்தக் கொலை முயற்சியின் பின்னணி என்ன?
திருமங்கலம் அருகிலுள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிநாராயணன், மருது சேனை அமைப்பின் நிறுவனத் தலைவராக இருக்கிறார். கள்ளிக்குடி - கல்லுப்பட்டி சாலையில் இவருடைய அலுவலகம் உள்ளது. இவர், தனது அலுவலகத்திலிருந்து கள்ளிக்குடி – விருதுநகர் நான்குவழிச்சாலையில் மையிட்டான்பட்டிக்கு காரில் சென்றபோது, எதிர்திசையில் வந்த கார் மோதியது.
இதனைத் தொடர்ந்து காரில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டு வீசியுள்ளது. பெட்ரோல் குண்டு காரில் படாத நிலையில், காரை ஓட்டிவந்த டிரைவர், சாலை ஓரப்பள்ளத்தில் காரை விட்டு தப்பித்துள்ளார். அந்தக்கும்பல் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்தபோது, எறிவதற்கு முன்பாகவே குண்டு வெடித்துள்ளது. உடனே, அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிஒடியது.
இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிந்ததும், ஏ.டி.எஸ்.பி. மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. ஆதிநாராயணன் மீது நடத்திய கொலை முயற்சி, அக்கட்சியின் நிர்வாகிகளுக்குத் தெரியவர, கொல்ல முயன்றவர்களைக் கைது செய்யக்கோரி, கள்ளிக்குடி – விருதுநகர் நான்கு வழிச்சாலையின் குறுக்கே காரை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியலைக் கைவிட்டனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருது சேனை அமைப்பின் நிறுவனர் ஆதிநாராயணன் “இரண்டு நாட்களுக்குமுன், விருதுநகர் மற்றும் கள்ளிக்குடி பகுதியில் காவல்துறையின் துணையோடு கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவது குறித்து, திருமங்கலம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளித்தேன். நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினேன். காவல்துறையினரின் துணையோடு, ஏற்கெனவே என்னுடைய அமைப்பின் பொருளாளரைக் கொலை செய்த ஞானசேகரின் ஆதரவாளர்களை ஏவிவிட்டு, என்னைக் கொலை செய்யும் நோக்கத்தில்தான் பெட்ரோல் குண்டு வீசி, துப்பாக்கியாலும் சுட்டுக்கொல்வதற்கு முயற்சித்தனர். கார் டிரைவரின் சாமர்த்தியத்தால் நான் உயிர் பிழைத்தேன். இந்த விஷயத்தில் காவல்துறை அலட்சியம் காட்டுகிறது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவேண்டும். இல்லையென்றால், தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.” என்றார்.