திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனியார் நிறுவன பங்களிப்புடன் கட்டப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டடங்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளரும் நகர மன்றத் துணைத் தலைவருமான வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், “தமிழக முதல்வர் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூபாய் 35 ஆயிரம் கோடி ரூபாய் நிதிகளை ஒதுக்கி, கல்விக்காகப் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். தொகுதி முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவ மாணவிகள் சரளமாக ஆங்கிலம் பேச அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மாணவ மாணவிகள் நலனில் அக்கறை கொண்டு செயல்படுத்தி வருகிறார். மாணவர்கள் எண்ணங்கள் அனைத்தும் வானுயரமாக இருக்க வேண்டும்'' என்றார்.