தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 30ம் தேதி பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்து, நலத் திட்டங்களை வழங்குவதற்காக திண்டுக்கல்லுக்கு வருகை தர இருக்கிறார்.
தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக திண்டுக்கல்லுக்கு வர இருப்பதால் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. திண்டுக்கல் பைபாஸ் அருகே உள்ள அங்குவிலாஸ் பள்ளி விளையாட்டு மைதானத்தில் விழாவிற்கான மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு ஆலோசனையும் வழங்கினார்கள்.
இந்த ஆய்வின் போது பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில் குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் விசாகன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன், துணை மேயர் ராஜப்பா உள்பட அதிகாரிகளும் கட்சிப் பொறுப்பாளர்களும் இருந்தனர்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ. பெரியசாமி, “வருகிற 30-ஆம் தேதி திண்டுக்கலுக்கு வரும் முதல்வர் ஸ்டாலினை மக்கள் மகிழ்ச்சியோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள். ஏற்கனவே ஏழை எளிய மக்கள் மனு கொடுத்து இருக்கிறார்கள். அதனடிப்படையில் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்க இருக்கிறார். அதோடு திண்டுக்கல் மாநகருக்கு புதிய குடிநீர் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் இருக்கிறார். ஏற்கனவே தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டத்துக்கும் செய்யாத அளவுக்கு ஐந்து கல்லூரிகளை முதல்வர் நம் (திண்டுக்கல்) மாவட்டத்திற்கு கொடுத்திருக்கிறார். அதுபோல் வரக்கூடிய கல்வி ஆண்டிலேயே நத்தத்திலும் கல்லூரி கொண்டுவரப்படும்.
அதுபோல் முதன்முதலில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை திண்டுக்கலுக்கு தான் முதல்வர் கொண்டு வந்தார். அதைத்தொடர்ந்து தான் ஆத்தூர், ஒட்டன்சத்திரம் தொகுதிக்கும் கொடுத்தார். இந்த மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் கல்வி உள்பட அனைத்து திட்டங்களையும் சமமாக செய்யப்படும்.
நீட் தேர்வை தமிழக முதல்வர் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். அதுபோல் கூட்டுறவுத் துறை மற்றும் உணவுத் துறை மூலம் மிகப்பெரிய சாதனையை உருவாக்குவோம்” என்று கூறினார்.