விளையும் உருளைகிழங்கெல்லாம் சாம்பாருக்கே போய்விட்டால் எப்படி சிப்ஸ் தொழிற்சாலை அமைக்க முடியும் என தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
2022-23ஆம் ஆண்டிற்கான தொழில் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்ற நிலையில், சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்குப் பதிலளித்து பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ''வெட்டு தீர்மானங்களை பொறுத்தவரை தொழிற்துறையில் 87 வெட்டுத்தீர்மானங்கள் வந்திருக்கிறது. தமிழ் வளர்ச்சித்துறையில் ஏறத்தாழ 68 வெட்டுத்தீர்மானங்கள் வந்திருக்கிறது. இந்த வெட்டு தீர்மானங்களை எல்லாம் நான் படித்திருக்கிறேன். குறிப்பாக உதகமண்டலம் சட்டமன்ற உறுப்பினர் உருளைக்கிழங்கு சிப்ஸ் உற்பத்தி செய்ய தொழிற்சாலை வேண்டும் என கேட்டிருந்தார். நாங்கள் கேட்டோம், அங்கு விளையக்கூடிய உருளைக்கிழங்குகளை எல்லாம் தமிழ்நாட்டில் மற்ற பகுதியில் உள்ளவர்கள் சாம்பார் வைப்பதற்காக வாங்கி சென்றுவிடுகிறார்கள். அங்கு அது சாம்பராகவும், சப்ஜியாகவும் மாறிவிடுகிறது. எனவே அங்கு கொஞ்சம்தான் சிப்ஸ் தயாரிக்க உருளைக்கிழங்கு இருக்கிறது என்று வந்திருக்கிறது'' என்றார்.