மத்திய அரசு கொண்டுவந்துள்ள பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை தேர்தல் நேரக் கண்துடைப்பாகத்தான் பார்க்கிறோம் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில், ''எல்லாருமே ஆதரிக்கின்ற மசோதா மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா. தொடர்ந்து திமுக இதை நிறைவேற்ற வேண்டும் என்று கலைஞரிலிருந்து தற்போதைய முதல்வர் ஸ்டாலின் வரை தொடர்ந்து வலியுறுத்தக் கூடிய மசோதாவாக இருந்தது. பலமுறை இது தொடர்பாக பிரதமருக்கு வலியுறுத்தி கடிதம் எழுதி இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் இத்தனை ஆண்டுகள் கழித்து இரண்டு முறை ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு, பாஜக இப்பொழுதுதான் இந்த மசோதாவை நிறைவேற்றுகிறோம் என திடீரென எந்த அறிவிப்பும் இல்லாமல் பாராளுமன்றத்தில் கொண்டு வருகிறார்கள்.
இந்த மசோதாவை கொண்டு வரும்போது முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிய வேண்டும். அதற்குப் பிறகு ஒவ்வொரு தொகுதிக்கான மறு சீரமைப்பு நடைபெற்ற முடிந்த பிறகு தான் செயல்முறைக்கு கொண்டுவரப்படும் என்று சொல்கிறார்கள். இதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என யாராலுமே குறிப்பிட்டு சொல்ல முடியாத சூழல் இருக்கிறது. இதைத்தான் நம்முடைய முதல்வரும், அவருடைய அறிக்கையில் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார். இதெல்லாம் என்று நிறைவேற்றப்பட்டு, எப்பொழுது அமலுக்கு கொண்டுவரப்படும் என்ற மிகப்பெரிய கேள்வி எல்லோருக்கும் இருக்கிறது. இதை தேர்தலுக்கு முன்பு பெண்களை ஏமாற்றும் கண்துடைப்பாகத் தான் பார்க்கிறோம்'' என்றார்.