தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஜீரணிக்கவே முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மதுரையைச் சேர்ந்த ஹென்றி என்பவர் தொடர்ந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த முறையே நீதிபதிகள் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற காலகட்டத்திற்கு முன்பு இரண்டு மாதம், துப்பாக்கிச் சூடுச் சம்பவத்திற்கு பிறகான இரண்டு மாதம் என மொத்தம் நான்கு மாதங்களில் அங்குள்ள காவல் துறை அதிகாரிகள் சொத்து மதிப்பு என்ன என்பதை விசாரிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லஞ்ச ஒழிப்புத்துறை இது குறித்து விசாரிக்க கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு நீதிபதிகள் நாங்கள் நீங்கள் கேட்ட அவகாசத்தை கொடுக்கிறோம். ஆனால் சொத்து விவரங்கள் முழுமையாக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் இது தொடர்பான விரிவான விசாரணைக்கு டிஜிபி, அரசு துறை செயலாளர் ஆகியோர் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதோடு மட்டுமல்லாது துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சில கருத்துக்களையும் பதிவு செய்தனர். சிபிஐ விசாரணை வரை நடைபெற்றுள்ளது. ஆனால் சிபிஐ விசாரணை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சம்பத்தில் அங்குள்ள மக்கள் அலறியடித்து உயிருக்கு பயந்து ஓடி இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களை விரட்டிச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளவோ, ஜீரணிக்கவோ முடியாது. இது போன்ற ஒரு சம்பவம் தங்களுடைய வாழ்நாளிலேயே நாங்கள் கேள்விப்பட்டதேயில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது எனவே இந்த வழக்கை நாங்கள் எடுத்து விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.