கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னபரூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது. இக்கடையை திறப்பதற்கு முன்பு பெண்கள், மற்றும் பொதுமக்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தினர். ஆனால் தமிழக அரசானது அப்பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்காமல் மதுபானகடை திறந்தது. இந்நிலையில் மதுபிரியர்கள் மது அருந்திவிட்டு, இரு சக்கர வாகனத்தில் பள்ளி செல்லும் மாணவிகளை பயமுறுத்துதல், பெண்கள் செல்லும் போது ஆபாச வார்த்தைகள் பேசுதல், மதுபாட்டிகல்கள், பிளாஸ்டிக் பாட்டில்களை வயல்நிலங்களில் வீசுதல், பள்ளி மாணவர்களை குடிப்பழக்கத்திற்கு ஆளாக்குதல், திருட்டு சம்பவத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்களை கடை திறந்த நாள் முதல் மது பிரியர்கள் அட்டாகாசம் செய்து வந்துள்ளனர்.

இத்தொடர் சம்பவத்தினால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்த அப்பகுதி மக்கள் 15 நாட்களுக்கு முன்பு ஒன்றுசேர்ந்து, மதுபான கடையை முற்றுகையிட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் 15 நாட்களுக்குள் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது மட்டுமில்லாமல், மதுபான கடையும் மூட வில்லை. இதனால் ஆத்திரமடைந்தை அப்பகுதி பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் தமிழக அரசின் அதிகார போக்கை கண்டித்தும், கடையை மூடக்கோரியும் மதுபானகடையை முற்றுகையிட்டனர். அப்போது மது கடைக்கு , வந்த மது பிரியர்கள், பெண்கள் நடத்தும் போராட்டத்தை கண்டு கொள்ளாமல், மது வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது. பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சேர்ந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து முடிவு எடுக்கலாம் என்று, கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.