உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தற்போது நிறைவு பெற்றது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி உலகப் புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. முதல் நாள் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் நடைபெற்ற நிலையில், இன்று காலை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியானது துவங்கியது.
காலையிலிருந்து விறுவிறுப்பாக நடந்த ஜல்லிக்கட்டு மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்றது. இப்போட்டியில் 26 காளைகளை அடக்கிய பூவந்தியை சேர்ந்த மாடுபிடி வீரர் அபி சித்தர் முதல் பரிசை தட்டிச் சென்றார். அவருக்கு தமிழக முதல்வரின் சார்பில் வழங்கப்பட்ட கார் பரிசாக அளிக்கப்பட்டது. அடுத்து ஏனாதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அஜய் 20 காளைகளை அடக்கி இரண்டாவது பரிசை வென்றார். அதேபோல் அலங்காநல்லூரைச் சேர்ந்த மாடுபிடி வீரர் ரஞ்சித் 12 காளைகளை அடக்கி மூன்றாம் பரிசு பெற்றார். இந்த போட்டியில் மொத்தமாக 820 மாடுகள் களமிறங்கிய நிலையில், 304 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 50 பேர் காயமடைந்தனர். போட்டியில் விடப்படாத காளைகளுக்கு தங்க காசு பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.