மத்திய அரசு, சமீபத்தில் சித்த மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்று அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர்.
நவீன அறிவியல் மருத்துவ முறையையும் ஆயுர்வேத மருத்துவ முறையையும் இணைத்து, ஒருங்கிணைந்த கலப்பட மருத்துவ முறையை மத்திய அரசு உருவாக்குகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மருத்துவத் துறையில் நவீன உபகரணங்களின் அசுர வளர்ச்சி பெரிய அளவிலான மாற்றத்தையும், நோயாளிகளின் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அறுவை சிகிச்சையின் செயல்முறைகள் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இந்த நிலையில், சித்த மருத்துவர்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் சரிவரத் தெரியாததால், அறுவை சிகிச்சை என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
இது நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். தொழில்நுட்ப அளவில் அதற்கான பயிற்சிகள் எடுத்துமே ஒருசில நேரங்களில் அறுவை சிகிச்சை நோயாளிகளுக்குப் பலனளிப்பதில்லை. மத்திய அரசின் இந்தக் கொள்கை நோயாளிகளின் உயிரோடு விளையாடுவதாகும். எனவே இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றதாக, இந்திய மருத்துவச் சங்கக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.