தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரின் போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக நேற்றும் (26.06.2024) அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் எனச் சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இதனைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கோரியும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் இன்று (27.06.2024) காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகினறனர். அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தேமுதிகாவும் ஆதரவளித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் வந்து ஆதரவு தெரிவித்ததுடன், போராட்டத்திலும் கலந்துகொண்டார்.
படங்கள் - எஸ்.பி.சுந்தர்