நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
அதிமுக ஏற்கெனவே கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இன்று அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சி, எஸ்டிபிஐ, புரட்சி பாரதம் கட்சி, ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளுடன் இன்று கையெழுத்து ஒப்பந்தம் ஆகிறது.
இதற்காக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வாசித்தார். தென் சென்னை- ஜெயவர்தன், வடசென்னை - ராயபுரம் மனோ, காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர், அரக்கோணம் - ஏ.எல்.விஜயன், கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ், ஆரணி - கஜேந்திரன், விழுப்புரம் (தனி) - பாக்யராஜ், சேலம் - விக்னேஷ், நாமக்கல் - தமிழ்மணி, ஈரோடு-ஆற்றல் அசோக்குமார், கரூர்-தங்கவேல், சிதம்பரம் (தனி) - சந்திரகாசன், நாகப்பட்டினம் (தனி) - சுர்ஜித் சங்கர், மதுரை - சரவணன், தேனி-நாராயணசாமி, ராமநாதபுரம் - ஜெயபெருமாள்' ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்தார்.
Published on 20/03/2024 | Edited on 20/03/2024