விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அதிமுக நகர செயலாளராக வெங்கடேசன் என்பவர் கட்சி பதவி வகித்து வருகிறார். இவரிடம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் எஸ்.பி.ஐ வங்கி எதிரில் டீக்கடை நடத்திவரும் ராஜேந்திரன் என்பவர் தனது மனைவி கல்பனாவுக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை கேட்டு கடந்த அதிமுக ஆட்சியில் 3 லட்சம் பணம் தந்துள்ளார். வேலை வாங்கித்தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது.
ராஜேந்திரன், கல்பனா இருவரும் பலமுறை அவர் வீட்டுக்குச் சென்று பணம் கேட்டுள்ளனர். ஆனால் பணம் தராமல் இழுத்தடித்துள்ளார். இதற்கிடையே கல்பனா வெங்கடேசன் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இது ராஜேந்திரன் குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெங்கடேசன் - ராஜேந்திரன் இடையே முன்விரோதம் அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் மார்ச் 16 ஆம் தேதி இரவு வெங்கடேசன் வங்கியில் ஏ.டி.ம். மையத்திற்கு பணம் எடுக்கச் சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் வெங்கடேசனிடம் பிரச்சனை செய்துள்ளனர். அப்போது ராஜேந்திரன் கல்லை எடுத்து வெங்கடேசன் தலையில் பலமாக தாக்கியதில் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட வெங்கடேசன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் கல்லால் தலையில் தாக்கியதில் பலத்த ரத்த காயம் அடைந்த வெங்கடேசனை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் மார்ச் 17 ஆம் தேதி உயிரிழந்தார்.
இது குறித்த தகவலின் பெயரில் செஞ்சி காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ராஜேந்திரனை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த செஞ்சி போலீசார் ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி கல்பனா ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். ராஜேந்திரன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி கல்பனாவை செஞ்சி போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.அதிமுக செஞ்சி நகர கழக செயலாளர் கொலையால் செஞ்சி பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. அதிமுக நிர்வாகிகளிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.