அ.தி.மு.க. எம்.பி.க்கள் கடலூர் அருண்மொழிதேவன், அரக்கோணம் ஹரி, திருச்சி குமார், சிதம்பரம் சந்திரகாசி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் குன்னம் ராமச்சந்திரன், காட்டுமன்னார்கோயில் முருகுமாறன், சிதம்பரம் பாண்டியன், பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமு, சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் இன்று (7.1.2019) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் கூட்டாகப் பேட்டியளித்தனர்.
அப்போது அவர்கள், "சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் ஆகிய இருவரும், மறைந்த முதல்வர் அம்மா அவர்களுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க அமைச்சரவையை கேட்டதாகவும், அதற்கு, அமைச்சரவை ஒப்புக் கொள்ளவில்லை என்றும், இதனை ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், 'மேற்படி இருவரையும் எதிர்வாதியாக விசாரிக்க வேண்டும். யாரையோ காப்பாற்றுவதற்காக இப்படி பொய்யான குற்றச்சாட்டை அமைச்சரவை மீது வீசியிருக்கிறார்' என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத டாக்டர் ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் என்ற போர்வையில் கருத்து தெரிவித்து அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கண்டன தீர்மானத்தை நிறைவேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சங்கம் பதிவு பெற்ற சங்கமா?" என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினர்கள்.
தொடர்ந்து பேட்டியளித்த எம்.பி.க்கள், "அம்மா ஜெயலலிதாவால் பத்து வருடங்கள் ஒதுக்கிவைக்கப்பட்ட டி.டி.வி. தினகரன், அம்மா இறந்ததற்குப் பிறகே அரசியலுக்கு வருகிறார். இப்படி இவர்கள் செய்தது அம்மாவின் சாவில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்பது சாதாரண தொண்டனுக்கும் சந்தேகம் எழுந்திருக்கிறது உண்மை. இந்த நிலையில், சேத்தியாத்தோப்பில் நேற்று (6.1.2019 ) பேசிய தினகரன், ராதாகிருஷ்ணன் நல்ல அதிகாரி என்று சொல்கிறார். இதன்மூலம் அம்மாவின் சாவில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு தொடர்பிருப்பதை ராதாகிருஷ்ணன் மறைத்து அவர்களுக்கு ஆதரவாக ஆணையத்தில் வாக்குமூலம் கொடுத்து இருப்பதைத்தான் காட்டுகிறது. இதன்மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துள்ளது.
மூத்த அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களைப் பற்றி கூட மிகவும் தரக்குறைவாக கேவலமாக அந்த கூட்டத்தில் பேசியிருக்கிறார் தினகரன். ஒரு கட்டத்தில் , கடலூர் அமைச்சர் எம்.சி. சம்பத் இந்த மாவட்டத்தில்தானே இருக்க வேண்டும் . இந்த வழியாகத்தானே கும்பகோணம் வரவேண்டும். எந்த மரத்தையும் விட்டுவைக்காத போராட்டத்தை செய்தவர்கள் அப்படிப்பட்டவர்கள் எம்.சி. சம்பத்தை சும்மா விடமாட்டார்கள் என்று வன்முறையை தூண்டும் விதமாக பேசியிருக்கிறார் தினகரன். அவர் அரசியல்வாதியோ தலைவரோ அல்ல. இப்படி பேசியிருப்பதன் மூலம் ஒரு பெரிய சமுதாயத்தை "மரம் வெட்டிகளாக" இழிவுபடுத்தியுள்ளார் தினகரன். ஆக, ஒரு பெரிய சமுதாயத்தை கொச்சைப்படுத்தி பேசிய தினகரனை வன்மையாக கண்டிக்கிறோம். அ.தி.மு.க. எந்த சாதியையும ஆதரிக்காது. அம்மாவின் சாவில் மர்மம் இருக்கிறது. அது சசிகலா குடும்பமும் தினகரனும் மன்னார்குடி கும்பலும் சேர்ந்த செய்த சதிதான் என்பது கூடிய விரைவில் அம்பலமாகும்" என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
சட்டமன்றம் நடந்து வரும் நிலையில், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் இத்தகைய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.