ஈரோடு வ.உ.சி. பூங்கா அமைந்துள்ள மைதானத்தில் பொதுமக்கள் உடற்பயிற்சி, நடைபயிற்ச்சி செல்ல என தனியாக மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தினை நடைபயிற்சியாளர்கள் நலம் நாடும் சங்கத்தினர் பராமரித்து வந்தனர். இந்த நடைபயிற்சி மைதானமானது கூழாங்கற்கள் நடைமேடை, 8 வடிவிலான நடை தளம், வாக்கீங் டிராக், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி உபகரணங்களுடன் வெகு சிறப்பாக செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த நடைபயிற்சி மைதானத்தில் கூடுதலாக 5 உடற்பயிற்சி உபகரணங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டது. இந்த உடற்பயிற்சி உபகரணங்களை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான ஈரோடு மேற்கு கே.வி.ராமலிங்கம், ஈரோடு கிழக்கு கே.எஸ் தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.
அப்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் நம்ம முதல்வர் எடப்பாடியார் அவரின் சொந்த ஊரான சேலத்தில் உடற்பயிற்ச்சிக் கூடம் திறந்த போது அந்த கருவிகளை பிடித்து படுத்து, எழுந்து, குனிந்து பல உடற்பயிற்சிகள் செய்தார். அப்படி உங்களாலும் செய்ய முடியுமா என எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து கேட்க, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோடு போட்டா நாங்க ரோடு போடுவோம் எனக் கூறிய இரண்டு எம்.எல்.ஏ.க்களும் உடற்பயிற்சி கருவிகளில் ஏறி அசைய தொடங்கினார்கள். ஆ.. இப்படி.. இப்படி..., இப்படித்தானே எடப்பாடியார் செய்தார்... என கவுண்டமணி பாணியில் ர.ர.க்களிடம் செய்து காட்டினார்கள்.