தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை வெளியீடு உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளன.
இந்நிலையில் விருதுநகர், சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜவர்மன் அமமுக டிடிவி.தினகரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் எம்.எல்.ஏ ராஜவர்மனுக்கும் முட்டல் மோதல்கள் இருந்துவந்தன. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது நடைபெற்ற சாத்தூர் சட்டமன்றத் இடைத்தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டு எம்.எல்.ஏ ஆனவர் ராஜவர்மன் என்பது குறிப்பிடத்தக்கது.