விருதுநகர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகளும், ஊராட்சி மற்றும் நகர வார்டுகளில் பொறுப்பாளர்களும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி அளித்த பட்டியல், அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டு, தகவல் தொழில்நுட்ப பிரிவில், 800 பேர் வரை புதிய நிர்வாகிகள் ஆகியுள்ளனர். இந்த நியமனம், இம்மாவட்டத்தில் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக, கோஷ்டி அரசியல் செய்து வருபவர்களை உஷ்ணப்படுத்தியிருக்கும் நிலையில், ’2016-ல் மாவட்டம்தோறும், 14 ஐ.டி. விங்க் நிர்வாகிகளை ஜெயலலிதா நியமித்தார்.
அப்போது, ஐ.டி. விங்க் தூள் கிளப்பியது. 2020-ல், இந்த ஒரு மாவட்டத்திற்கு மட்டும் 800 பேரை நியமித்துள்ளனர். ஒரு சிலரைத் தவிர, மற்ற அத்தனை பேருமே வேஸ்ட்!’ என்று சமூக வலைத்தளங்களில், அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ‘அத்தனை பேரும் வேஸ்ட்டா?’ என்று தற்போது நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “பாதிக்கும் மேல அப்படித்தான்! வார்டு கவுசிலர்ல இருந்து, கிளைச் செயலாளர் வரைக்கும், மாமன், மச்சான், சொந்தக்காரன்னு, ஆளாளுக்கு சிபாரிசு பண்ணுன எல்லாருமே நிர்வாகிகளா ஆகிட்டாங்க. இவங்க எல்லாருமே ராஜேந்திரபாலாஜியோட வலுவான ஆதரவாளர்கள். இந்த மாதிரி சிபாரிசு பண்ணுனவங்க லிஸ்ட்ல, கட்சியோட ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். ஐயாவும் வர்றாரு.
சாம்பிளுக்கு ஒருத்தரை சொல்லுறேன். பேரு ராஜ்கமல். அவரு இருக்கிறது சென்னைல. ஆனா.. சொந்த ஊரு அருப்புக்கோட்டைன்னு சொல்லி, தகவல் தொழில்நுட்ப பிரிவுல, விருதுநகர் மாவட்ட இணைச் செயலாளர் ஆயிட்டாரு. இவரோட ஃபேஸ்புக்ல போயி பார்த்தேன். அப்படி ஒண்ணும் ஆக்டிவா இல்ல. ‘பிரியாணிக்கு சுக்கா ஆக சிறந்த காம்பினேஷன்’னு.. இந்த மாதிரி போஸ்ட்தான் போட்டிருக்காரு. கடந்த (2019) ஆண்டு மார்ச் மாசம்.. அம்மா தாய் சேய் நலப்பெட்டகம்னு கவர்மெண்ட் ஸ்கீம் குறித்து பதிவு போட்டிருக்காரு. அதுவும்கூட அவரு வேலை பார்க்கிற மருந்து கம்பெனியோட ப்ராடக்ட்ங்கிறதுனால.
ஓ.பி.எஸ். ஐயாவோட மகன் ஜெயபிரதீப், ராஜ்கமலோட ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட்ல இருக்காரு. இவரு தேனில படிச்சிருக்காரு. இந்த தகுதிய மட்டும் வச்சிக்கிட்டு, இவரால, விருதுநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட இணைச் செயலாளரா ஆக முடியுதுன்னா.. அதுக்கு காரணம், ஓ.பி.எஸ். ஐயாவோட பலத்த சிபாரிசுதான்.” என்றவர், “முகநூலில், குறிப்பாக பெண்களும், தங்களின் சுயவிபரங்களை வேறு யாரும் தெரிந்துகொள்ளக் கூடாது என்று நினைப்பவர்களும்தான், ப்ரொஃபைலை ‘லாக்’ பண்ணி வைப்பார்கள். இங்கே கொடுமை என்னவென்றால், விருதுநகர் மாவட்ட அஇஅதிமுக பக்கத்தையே, லாக் செய்து வைத்திருக்கின்றனர். அது என்ன ரகசிய பக்கமா? இப்படி இருந்தால் எப்படி?” என்று கேட்டார். தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய நிர்வாகியான இன்னொருவரும் “இப்ப வரைக்கும் ராஜ்கமலை என்னால ரீச் பண்ண முடியல.” என்றார்.
தகவல் தொழில்நுட்ப பிரிவில், இதுபோன்ற நிர்வாகிகளை வைத்துக்கொண்டு, வாக்காளர்களை எப்படி ‘ரீச்’ பண்ணப் போகிறதோ ஆளும்கட்சி?