Skip to main content

அம்மா இல்லத்தை இடித்து தரைமட்டமாக்கிய அதிமுக நிர்வாகி. – பின்னணி என்ன?

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

ே்

 

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் திருவண்ணாமலை அதிமுக தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர் பெருமாள்நகர் ராஜன். தற்போது மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவராகவும் உள்ளார். அவர் மாவட்டச் செயலாளராக இருந்தபோது, திருவண்ணாமலை டூ வேலூர் சாலையில் அண்ணா நுழைவாயில் அருகில் அம்மா இல்லம் என்கிற பெயரில் தகர ஷீட் கூரை வேய்ந்த கட்டிடம் கட்டினார். அதன் ஒருபகுதி கட்சி அலுவலகமாகவும், மற்றொரு பகுதி இலவச கணிப்பொறி பயிற்சி மையம், தையல் பயிற்சி மையம்  செயல்பட்டு வந்தது.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள்நகர் ராஜனிடம் இருந்த மா.செ பதவி பறிக்கப்பட்டு முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியிடம் வழங்கினார்கள் அதிமுகவினர். அக்ரி.கிருஷ்ணமூர்த்தியும் – பெருமாள்நகர் ராஜனும் அரசியலில் எலியும் – பூனையும் போன்றவர்கள். இதனால் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி அதே திருவண்ணாமலை டூ வேலூர் சாலையில் வேங்கிக்கால் பகுதியில் தனியே கட்சி அலுவலகத்தை அமைத்துக்கொண்டார். இந்நிலையில் சில மாதங்களாக அம்மா அலுவலகம் செயல்படாமல் இருந்துவந்தது. இந்நிலையில் கடந்த மே 31ஆம் தேதி இரவு,  ஜே.சி.பி, ஃகிரேன், லாரிகளை கொண்டுவந்து அம்மா இல்லத்தை இடித்துத் தள்ளி பொருட்களை அப்புறப்படுத்தியுள்ளது அதிமுகவைச் சேர்ந்த ஒரு கும்பல். இதுதெரிந்து ராஜன் ஆதரவாளர்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றார்கள். விவரம் தெரிந்து காவல்துறை அங்கே குவிக்கப்பட்டுள்ளது.

 

அதிமுக பிரமுகரே ஜெ பெயரிலான அம்மா இல்லத்தை இடிக்க வேண்டிய அவசியம் என்ன?

 

அதிமுக நிர்வாகிகளோ, எங்கள் கட்சி ஆளும்கட்சியாக இருந்தபோது போளுரை சேர்ந்த மார்வாடி ஒருவரிடமிருந்து 4 ஆயிரம் சதுர அடி இடத்தை பி.வி.சி பைப் கம்பெனி தொடங்கப்போவதாகச் சொல்லி ராஜன், வாடகை ஒப்பந்தம் போட்டு இடத்தை வாங்கியுள்ளார். சொன்னது போல் ஃபைப் கம்பெனி தொடங்காமல் அம்மா இல்லத்தைத் தொடங்கி, கட்சி அலுவலகமாக மாற்றினார். வாடகையும் செலுத்தவில்லை. 4 ஆண்டுகளுக்கு முன்பு போளுரை சேர்ந்த அந்த நில உரிமையாளர், 7 ஆண்டுகளாக வாடகை தரவில்லை எனக்கேட்டபோது ஆளும்கட்சி மாவட்ட செயலாளரிடமே வாடகை கேட்பாயா என மிரட்டியுள்ளார். அந்த நில உரிமையாளர் அதிமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி நெருக்கம் என்பதால் அசரவில்லை.

 

சில பஞ்சாயத்துகள் இந்த இடம் தொடர்பாக நடந்துள்ளன. இறுதியில் அந்த நில உரிமையாளர், 7 வருட வாடகையை தா அல்லது 8 ஆயிரம் சதுர அடி இடத்தையும் நீங்களே வாங்கிக்குங்க அல்லது இடத்தை விற்கப்போகிறேன் காலி செய்து தா எனக்கேட்டுள்ளார். இவரோ பணம் இப்போ இல்லை வந்ததும் வாங்கிக்கிறேன் என்றுள்ளார். மாதங்கள் கடந்ததே தவிர இடத்தை வாங்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து நில உரிமையாளர் வழக்குப் போட்டுள்ளார், அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ளது. 3 ஆண்டுக்கு முன்பு திருவண்ணாமலையைச் சேர்ந்த அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் சஞ்சீவியிடம், 8 ஆயிரம் சதுர அடியை விற்பனை செய்துவிட்டு அந்த விவகாரத்திலிருந்து ஒதுங்கியுள்ளார் நில உரிமையாளர். இதற்கிடையே அரசின் பொறம்போக்கு இடத்தையும் வளைத்துப்போட்டுள்ளார் என்கிற புகார் எழுந்தது. இதனால் ஆட்சி மாறி, திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிகாரிகள் இடத்தை அளந்து சுத்தி கம்பி வேலி போட்டுவிட்டனர். இதனால் அம்மா இல்லத்துக்குப் போக வழியில்லாமல் ஆனது.

 

இடத்தை வாங்கிய அதிமுக வழக்கறிஞர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மின்சார கனெக்ஷன் வாங்கப்பட்டுள்ளது. ஆவணங்களைக்காட்டி ராஜனிடம் காலி செய்ங்க எனச் சஞ்சீவி கேட்டபோது, எனக்கு ஒரு கோடி ரூபாய் தந்தால் காலி செய்கிறேன் என ராஜன் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த கட்டப்பஞ்சாயத்து அடுத்தடுத்து நடந்துவந்துள்ளது, முடிவு வராமல் இழுத்துக்கொண்டு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் தன்மகள் குடும்பத்தைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்றுள்ளார் பெருமாள்நகர்.ராஜன். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு இடத்தின் உரிமையாளர் ஆட்களை அழைத்து வந்து இரவோடு இரவாக அரசாங்கம் அமைத்த கம்பி வேலியை அறுத்து எரிந்துவிட்டு அதன் வழியாக வாகனங்களை எடுத்துச்சென்று அம்மா இல்லத்தை இடித்து தரைமட்டமாக்கி பொசிஷன் எடுத்துவிட்டார் என்கிறார்கள்.

 

ராஜன் ஆட்கள் புகார் மனு தந்தனர். காவல்துறை, வருவாய்த்துறை இதுகுறித்து விசாரணை நடத்திவருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்