அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் தொடங்கி பல்வேறு வழக்குகளுக்கு பிறகு எடப்பாடி தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளராக நிலைநிறுத்தியுள்ளார். தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சார்பில் தனித்தனியாக நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்தார். தொடர்ந்து இபிஎஸ் அதிமுகவின் பொதுச்செயலாளராக உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொடுத்த மனுக்களின் விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பு கோரிய இடைக்காலத் தடை என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், இறுதி விசாரணையை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் வரும் 7 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என அதிமுக அறிவித்துள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருப்பதாலும், அதிமுக தொடர்பான வழக்கு காரணமாக சில வாரங்கள் கழித்து செயற்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.