நாளை அதிமுகவின் பொன்விழா மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் மதுரையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் வலையன்குளத்தில் பிரம்மாண்ட மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு' எனத் தலைப்பிடப்பட்ட இந்த மாநாட்டிற்காக ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் அவரவர்கள் மாவட்டங்களில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருந்தனர். தற்பொழுது மாநாட்டிற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், அதிமுகவின் பொன்விழா மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் மதுரையில் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகரில் இருந்து வரக்கூடிய கனரக வாகனங்கள் திருச்சி, சென்னை செல்வதற்காக திருமங்கலம், கப்பலூர், வாடிப்பட்டி வழியாக திண்டுக்கல் மார்க்கமாக திருச்சி செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து வரும் வாகனங்கள் எட்டயபுரம் வழியாக கோவில்பட்டி சென்று அங்கிருந்து விருதுநகர், திருமங்கலம் ,கப்பலூர், வாடிப்பட்டி, திண்டுக்கல் மார்க்கமாக திருச்சி மற்றும் சென்னை செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் திருச்சியில் இருந்து மதுரை மார்க்கமாக விருதுநகர், தென்காசி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் கொட்டாம்பட்டியில் இருந்து நத்தம், திண்டுக்கல், வாடிப்பட்டி, திருமங்கலம் வழியாக செல்ல வேண்டும் என்றும், சென்னை மற்றும் திருச்சியில் இருந்து மதுரை மார்க்கமாக தூத்துக்குடி செல்லும் வாகனங்கள் மேலூரில் இருந்து திருப்புவனம், நரிக்குடி, அருப்புக்கோட்டை வழியாக செல்ல வேண்டும். ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையில் இருந்து தூத்துக்குடி, விருதுநகர் செல்லும் வாகனங்கள் திருப்புவனம், நரிக்குடி வழியாக அருப்புக்கோட்டை சாலை வழியாக செல்ல வேண்டும் என்றும், சென்னை மற்றும் திருச்சியில் இருந்து மதுரை மார்க்கமாக ராமநாதபுரம் செல்லக்கூடிய வாகனங்கள் மேலூரில் இருந்து சிவகங்கை வழியாக செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.