சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று (11/07/2022) காலை 09.15 மணிக்கு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது.
இதில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். கட்சியின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் விரோதமாக செயல்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகிய நான்கு பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியது பொதுக்குழு. கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன், முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளர் முறுக்கோடை ராமர், முன்னாள் எம்பியும், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளருமான பார்த்திபன், தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர் சோலைராஜ், ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் இபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்தனர். இதேபோல் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் இபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதையடுத்து பொதுக் குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஒபிஎஸ் பொருளாளர் பதவி உட்பட அடிப்படை உறுப்பினர் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை வரவேற்று தமிழகம் முழுவதும் உள்ள இபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி, அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-இன் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் இபிஎஸ்-க்கு ஆதரவாக அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
தேனி அதிமுக நகர அவைத் தலைவர் முருகேசன் தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு சிலை மும்முனை சந்திப்பிலும், அல்லிநகரம் பேருந்து நிலையம் பகுதியிலும் கூடிய அதிமுகவினர் 'இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் வாழ்க' என கோஷம் எழுப்பினர். பின் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கம்பம் பகுதியில் இபிஎஸ்-க்கு துணை நிற்கும் ஜக்கையனின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.