புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் இன்று நகர்மன்ற, பேரூராட்சி மன்ற தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
பேரூராட்சித் தலைவர் தேர்தல் நடக்கும்போது ஆளும் கட்சியினரால் அசம்பாவிதங்கள் நடத்தப்படலாம் அதனால் மீண்டும் பாதுகாப்பு வேண்டும் என்று நேற்று நீதிமன்றத்தை நாடி போலீஸ் பாதுகாப்புக்கான உத்தரவையும் பெற்றனர். இந்த நிலையில் இன்று காலை சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இருந்தும் பேரூராட்சி முன்பாக திமுக - அதிமுக கட்சியினர் திரண்டு நின்ற நிலையில் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் இருதரப்பையும் கட்டுப்படுத்த முயற்சி எடுத்த நிலையில் இருதரப்பினரும் கல் வீச்சில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தும் சூழல் ஏற்பட்டது. அங்குள்ள 15 வார்டுகளில் மொத்தம் 9 வார்டுகளில் அதிமுக வென்றிருந்த நிலையில் இந்த மோதல் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக வேட்பாளராக சாலை பொன்னம்மாளும், திமுக வேட்பாளராக மதினா பேகம் ஆகியோர் போட்டியிட்ட நிலையில் இவ்வளவு பதற்றங்களுக்கு மத்தியில் அதிமுக வேட்பாளரான சாலை பொன்னம்மாள் அன்னவாசல் பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.