Skip to main content

"விதிகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும்" - வேளாண்மை துறை 

Published on 31/12/2022 | Edited on 31/12/2022

 

agriculture department new guidance to fertilizer centre 

 

உரக்கடைகளில் மானிய விலை உரம் வாங்கும் விவசாயிகளிடம் இணை இடுபொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என உரக்கடைகளுக்கு வேளாண்மைத்துறை உத்தரவிட்டுள்ளது.

 

நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் துரைசாமி கூறியதாவது, "நாமக்கல் மாவட்டத்தில் தற்போது பெய்துள்ள மழையைப் பயன்படுத்தி பருத்தி, மக்காச்சோளம், நெல், கம்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் யூரியா 1388 மெட்ரிக் டன், பொட்டாஷ் 959 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 390 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 4103 டன் என மொத்தம் 8 ஆயிரம் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

 

இவை அனைத்தும் விவசாயப் பயன்பாட்டுக்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மானிய விலை உரங்களுடன் இதர இணை இடு பொருட்களை வாங்குமாறு விவசாயிகளை யாரும் கட்டாயப்படுத்தக்கூடாது என உர விற்பனையாளர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தனியார் உரக் கடை உரிமையாளர்கள், அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு மட்டுமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரசாயன உரங்களின் இருப்பு மற்றும் விலைப் பட்டியல் விவரங்களை விவசாயிகள் தெரிந்துகொள்ளும் வகையில் விற்பனை நிலையங்களின் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும்.

 

விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக மானிய விலை உரங்களுடன் இணை இடுபொருட்களை வாங்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. உர விற்பனையாளர்கள் உரங்களை விற்பனை செய்யும்போது விற்பனை விலைப் பட்டியலை வழங்க வேண்டும். உரக்கட்டுப்பாட்டு சட்ட விதிகளை மீறும் உர விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை மீறி உரம் விற்பனை செய்தால், விற்பனை நிலையத்தின் உர விற்பனை மையத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு வேளாண்மைத் துறை இணை இயக்குநர் துரைசாமி தெரிவித்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்