நெடுவாசலில் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நடப்பு சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றக் கோரி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கடைவீதியில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் மணி தலைமையேற்றார். செல்வகுமார், கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் சொர்ணகுமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட பொருப்பாளர் சுந்தராசன் நிறைவுறையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பலரும் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாயம், விவசாயிகள் விவசாய தொழிலாளர்களை வஞ்சித்து மண்ணை தரிசாக்கும் திட்டமான நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக அரசு நடப்பு சட்டமன்றக் கூட்டத்தில் நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்து ஜூன் 12 ந் தேதி தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மழைக்காலம் தொடங்கும் முன்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து குளம், ஏரி, வரத்து வாய்க்கால்களை சீரமைத்து தண்ணீர் சேமிப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.