குமரி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, முள்ளம்பன்றி, ஓநாய் உள்ளிட்ட காட்டு மிருகங்கள் அதிகம் உள்ளன. இதில் தடிக்காரன் கோணம், கீரிப்பாறை மலைப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தனியாருக்கு சொந்தமான கிராம்பு தோட்டங்கள் உள்ளன. இங்கு வெளி மாவட்டங்களில் இருந்து வந்து, ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்துவருகிறார்கள். இவர்களின் பயன்பாட்டுக்காக அங்கு கோயில்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளன.
இந்த நிலையில், மாறாமலை எஸ்டேட் அருகில் ஹோட்டல் நடத்திவரும் தடிக்காரன்கோணம், வாளையத்துவயலைச் சேர்ந்த மணிகண்டன் (52), கோவை வேளாண்மை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் தனது மகள் ஸ்ரீணா (19) ஆகிய இருவரும், மணிகண்டனின் மோட்டார் சைக்கிளில் எஸ்டேட் பகுதியில் இருக்கும் காணிக்கை பெட்டி கோயிலுக்குச் சென்றுள்ளனர். பின் கோயிலிலிருந்து தனது ஹோட்டலுக்கு, மாமூட்டு எனும் காட்டுவழி குறுக்குப் பாதை வழியாக திரும்பியுள்ளனர்.
மாமூட்டு குறுக்குப் பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது அங்கு புதருக்குள் மூன்று யானைகள் நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன், தனது மோட்டார் சைக்கிளைத் திருப்பி தப்பி ஓட முயன்றார். அதற்குள் ஒரு யானை வேகமாக ஓடிவந்து, மோட்டார் சைக்கிளைத் தும்பிக்கையால் இடித்து கீழே தள்ளியுள்ளது. இதில் மணிகண்டனும் அவரது மகள் ஸ்ரீணாவும் கீழே விழுந்தனர்.
அந்த யானை, ஸ்ரீணாவின் இரண்டு கால்களையும் மிதித்ததோடு தும்பிக்கையால் அவரைத் தூக்கி வீசியுள்ளது. இதில் யானையின் பிளறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்து யானையைத் துரத்தியுள்ளனர். பின்னர் படுகாயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்த மணிகண்டனையும் ஸ்ரீணாவையும் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
தந்தையையும் மகளையும் யானை தாக்கிய சம்பவம் தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, மாறாமலை பகுதிகளில் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.