திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரியில் இருந்து நீக்கப்பட்ட மாணவர் மாரிமுத்துவை மீண்டும் சோ்க்க வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ் துறை மாணவன் மாரிமுத்து , மாணவர் அமைப்பின் நிர்வாகியாக உள்ளார். இவர் தலைமையில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாணவர்களை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும் கல்லூரி நடத்த இடையூராக மாரிமுத்து செயல்படுவதாக கல்லூரியில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டார்.
இந்த தகவல் அறிந்த கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சியடைந்து நீக்கப்பட்ட மாணவர் மாரிமுத்துவை உடனடியாக கல்லூரியில் சேர்க்க வேண்டும் என முறையிட்டனர். ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து இன்று 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது மாணவர் மாரிமுத்துவை உடனடியாக கல்லூரியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் மாணவர் மாரிமுத்துவை கல்லூரியில் சேர்க்கும் வரை மாணவர்களின் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட
மாணவர்கள் தெரிவித்தனர். இதனிடையே காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு சாலை மறியல் போராட்டத்தை கைவிட்ட திருவாரூர் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தையில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.