Skip to main content

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ஒப்பந்தம்

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

Agreement to build metro stations in Chennai!

 

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் 2 ஆம் கட்ட வழித்தடம் 5இல் மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு ரூ.1817.54 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஜிசா (JICA) நிதியுதவியின் ஒரு பகுதியாகும். இதற்கான ஏற்பு கடிதம் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திற்கு நேற்று முன்தினம் (11.09.2023)  வழங்கப்பட்டுள்ளது.

 

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் 2 ஆம் கட்ட வழித்தடம் 5இல் கொளத்தூர் சந்திப்பு மெட்ரோ, சீனிவாச நகர் மெட்ரோ, வில்லிவாக்கம் மெட்ரோ, வில்லிவாக்கம் பேருந்து நிலைய முனையம் மெட்ரோ மற்றும் வில்லிவாக்கம் எம்.டி.எச் சாலை மெட்ரோ, என ஐந்து சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைப்பதற்கு மற்றும் கொளத்தூர் சந்திப்பு முதல் வில்லிவாக்கம் எம்.டி.எச் சாலை வரை இரட்டை துளையிடப்பட்ட சுரங்கங்கள், யூ பிரிவு கொண்ட பாதைகள் மற்றும் சாய்வு பாதைகள் போன்ற பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். இதன் மூலம் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் 2 ஆம் கட்ட திட்டத்தின் மூன்று வழித்தடங்களில் 116.1 கி.மீ நீளத்தில் கட்டுமானம் மற்றும் தடம் அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் 100 சதவீதம் நிறைவுபெற்றுள்ளது.

 

இந்த ஒப்பந்தம் சென்னை மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் மு.அ. சித்திக் தலைமையில் நடைபெற்றது. இந்த ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் தி. அர்ச்சுனன் (திட்டங்கள்) மற்றும் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் ராமன் கபில் ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் டி. லிவிங்ஸ்டோன் எலியாசர், ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), கூடுதல் பொது மேலாளர் டி. குருநாத் ரெட்டி, (ஒப்பந்த கொள்முதல்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்