மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 1,600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் 'விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களைத் திரும்பப் பெறு' என்ற வாசகத்துடன் கூடிய பச்சை நிற 'மாஸ்க்' அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்காக உண்ணாவிரதத்தில் தலைவர்கள் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். உண்ணாவிரதப் போராட்டத்தில் முத்தரசன், பாலகிருஷ்ணன், கனிமொழி, பாரிவேந்தர் ரவிபச்சமுத்து, வைகோ, திருநாவுக்கரசர், வேல்முருகன், ஜவாஹிருல்லா, தங்கபாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட தலைவர்களும், தி.மு.க. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தப்பட்டதால் சட்டவிரோதமாகக் கூடுதல், அரசின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் தி.மு.க தலைவர் ஸ்டாலின், திமுக தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் என மொத்தம் 1,600 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.