சென்னை ஆவடி அருகே நிச்சயதார்த்தம் முடிந்த ஜோடி செல்பி மோகத்தில் கிணற்றில் தவறி விழுந்ததில், இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் இரு வீட்டாரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ஆவடிக்கு அருகே பட்டாபிராம் எனும் இடம் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு உட்பட்ட காந்திநகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் மெர்சி ஸ்டெஃபி. இவர் சென்னையில் உள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் பிரபல தொழில் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டிற்கு அருகேயுள்ள நவஜீவன் நகரில் அப்பு என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார்.
![incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/sVPcdXXtvaLrOQPuidACUT2IckHsAyMatLRHRuoEKTQ/1572937147/sites/default/files/inline-images/462_0.jpg)
இருவரும் ஆரம்ப காலத்தில் நண்பர்களாக பழகி வந்தனர். பின்பு இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. இவர்கள் காதலிப்பதை அறிந்த இரு வீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மெர்ஸி ஸ்டெபி என்ற பெண்ணுக்கும் அப்பு என்பவருக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதன்பிறகு காதல்ஜோடி பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்று உள்ளனர். இந்த நிலையில் நேற்று இருவரும் ஒன்றாக வெளியே போவதற்காக மெர்சி ஆபீஸ்க்கு லீவு போட்டுள்ளார். பின்னர் இருவரும் வெல்லஞ்சேரியில் உள்ள விளைநிலத்தில் தனிமையில் சந்தித்திருக்கின்றனர்.
பின்பு கிணற்றிற்கு அருகே நின்று செல்பி எடுக்க முயன்ற போது நிலைத்தடுமாறி மெர்சி ஸ்டெஃபி கிணற்றில் விழுந்துவிட்டார். அவரை காப்பாற்ற முயன்ற போது அப்புவும் கிணற்றுக்குள் விழுந்தார். இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் அப்பு சத்தம் போட்டுள்ளார். அவரது குரல் கேட்டு வந்த நில உரிமையாளர் சடகோபன், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அப்புவை போராடி மீட்டுள்ளார். அவரை ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனிடையே தகவலறிந்த ஆவடி தீயணைப்பு துறையினர் கிணற்றில் சிக்கியிருந்த மெர்ஸி ஸ்டெபியை சடலமாக மீட்டனர். பின்னர் உடல் ஆவடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. திருமணம் நிச்சயமான ஒரு வாரத்தில் செல்பி மோகத்தில் மெர்சி ஸ்டெபி உயிரிழந்தது பட்டாபிராம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.