கேரளாவில் பன்றி வளர்க்கும் பண்ணைகளில் பன்றிகளுக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழக எல்லையோரங்களில் தீவிர கண்காணிப்பினை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் கோட்டயம், வயநாடு ஆகிய பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வரும் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதிப்புக்குள்ளான பன்றிகள் கொன்று புதைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அருகில் உள்ள மாநிலமான தமிழகத்திற்கும் பன்றிக் காய்ச்சல் பரவலாம் என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாகத் தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டத்தின் புளியரை சோதனைச் சாவடியில் தமிழக சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.
கேரளாவிலிருந்து தமிழகம் நோக்கி வரும் வாகனங்களைச் சோதனையிட்டு கிருமி நாசினி மருந்துகளைத் தெளித்து வருகின்றனர். குறிப்பாகப் பன்றிகள், பன்றி இறைச்சிகள், கோழிகளை ஏற்றி வரும் வாகனங்களைத் திருப்பி அனுப்பி வைக்கின்றனர். மற்ற வாகனங்களுக்கு கிருமி நாசினி மருந்துகள் மட்டும் தெளிக்கப்பட்டு அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.