Skip to main content

கைதியை தப்பிக்க வைத்த விவகாரம்; சேலம் சிறை தலைமை வார்டன் பணிநீக்கம்!

Published on 15/01/2023 | Edited on 15/01/2023

 

nn

 

சேலம் மத்திய சிறையில் இருந்து கைதியை மாற்று வழியில் தப்பிக்க வைத்ததாக தலைமை வார்டனை நிரந்தர பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வசந்த். ரவுடி. இவர் மீது உள்ளூர் காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குற்ற வழக்கில் காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

 

நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சில மாதத்திற்கு முன்பு வசந்த், பிணையில் வெளியே சென்றார். சிறையை விட்டு வெளியே வந்த உடனே அவரை வேறு ஒரு வழக்கில் கைது செய்ய காஞ்சிபுரம் காவல்துறையினர் சேலம் மத்திய சிறை வாயில் முன்பு காத்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும் வசந்த் வெளியே வராததை அடுத்து காவல்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் சேலம் மத்திய சிறை வார்டன்களிடம் விசாரித்தபோது, சிறையை விட்டு வசந்த் ஏற்கனவே வெளியேறிவிட்டதாக கூறினர்.

 

முதன்மை நுழைவு வாயில் முன்பு பல மணி நேரமாக காத்திருக்கிறோம். எங்களுக்குத் தெரிந்து ரவுடி வசந்த் இதுவரை வெளியே வரவில்லை என்று அப்பாவித்தனமாக கூறினர். இதனால் வார்டன்கள் மீது காஞ்சிபுரம் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் சேலம் மத்திய சிறை எஸ்பிக்கு தகவல் அளித்து, விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டனர். இதில், ரவுடி வசந்தை, காஞ்சிபுரம் காவல்துறையினர் வசம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக சிறை வளாகத்தில் உள்ள கேண்டீன் நுழைவு வாயில் வழியாக வார்டன்கள் வெளியே அனுப்பி வைத்திருப்பது தெரிய வந்தது.

 

இதையடுத்து, கைதியை தப்பிக்க வைத்ததாக தலைமை வார்டன் ரமேஷ்குமார் (40), வார்டன் பூபதி ஆகிய இருவரையும், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மத்திய சிறை எஸ்பி தமிழ்ச்செல்வன் பணியிடைநீக்கம் செய்தார். கைதி தப்பிக்க வைக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், இவர்கள் இருவரில் யார் மூளையாக செயல்பட்டது என்பது குறித்து விசாரிக்க சிறைத்துறை கூடுதல் எஸ்பி சதீஸ்குமாரை நியமித்து, கோவை மண்டல சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டது. இதில், சேலம் மத்திய சிறை தலைமை வார்டன் ரமேஷ்குமார்தான், சிறை கேண்டீன் வாயில் வழியாக ரவுடி வசந்தை வெளியே அனுப்பி வைத்திருப்பது தெரிய வந்தது. இதற்காக ரவுடி வசந்திடம் கணிசமான அளவில் ரமேஷ்குமாருக்கு பணம் கொடுக்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்தது. இதற்கு மற்றொரு வார்டன் பூபதி உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து தலைமை வார்டன் ரமேஷ்குமாரை நிரந்தர பணிநீக்கம் செய்து மத்திய சிறை எஸ்பி தமிழ்ச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

 

பாலியல் பலாத்கார வழக்கில் இரண்டு வார்டன்கள் கைது செய்யப்பட்டது, கைதியை வேறு வழியில் தப்பிக்க வைத்த சம்பவத்தில் தலைமை வார்டன் பணிநீக்கம் செய்யப்பட்டது உள்ளிட்ட சம்பவங்கள் சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்