தமிழ்நாடு முழுவதும் கிராம ஊராட்சிகள் 12,525 உள்ளன. இதில் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் டேங்க் ஆபரேட்டர்கள், கூடுதல் டேங்க் ஆபரேட்டர்கள் என பணிபுரிந்து வருகிறார்கள். இதில் டேங்க் ஆபரேட்டர்கள் 40 ஆயிரம் பேருக்கு தொகுப்பூதியமாக 4,950 ரூபாய் வழங்கப்படுகிறது. அதே போல கூடுதல் டேங்க் ஆபரேட்டர்கள் மொத்தமாக 25 ஆயிரம் பேருக்கு மாதத்தொகுப்பு ஊதியமாக 250 ரூபாயும், தூய்மை காவலர்கள் மொத்தமுள்ள 66 ஆயிரம் பேருக்கு மாத ஊதியமாக 3,600 வழங்கப்படுகிறது. தூய்மை பணியாளர்கள் 25 ஆயிரம் பேருக்கு மாத ஊதியமாக நான்கு பிரிவுகளாக கொடுக்கப்படுகிறது. அதன்படி ரூ.2,500 முதல் ரூ. 7000 வரையிலும் கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் இவர்களுக்கு பணிநிரந்தரம் செய்யச்சொல்லி போராடிவருகிறார்கள்.
இது குறித்து பேசிய கிராம ஊராட்சி துய்மை பணியாளர்களின் சங்கத்தின் தலைவர், எங்களுக்கு நிரந்தர ஊதியம் வேண்டும்; அதற்கு ஒரே தீர்வு பணிநிரந்தரம் என்றார்.
இது குறித்து பேசி மூத்த வழக்கறிஞர் பாபா மோகன், “தூய்மை பணியாளர்கள் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா காலகட்டத்தில் இவர்களின் பணி வரவேற்கத்தக்கது. இவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை அதிமுக அரசிலும், தற்போது உள்ள திமுக அரசிலும் மறுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் ஒற்றைக் கோரிக்கையான பணி நிரந்தர கோரிக்கையை முன்னிறுத்தி வருகிறார்கள். அதை இந்த அரசு நிறைவேற்ற வேண்டும்.
நரிக்குறவர்களையும் மற்ற சமுதாய மக்களையும் நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்து வரும் முதலமைச்சர், தூய்மை காவலர்களையும், தூய்மை பணியாளர்களையும் நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கை கேட்க வேண்டும். இந்த பணியை செய்கிற பெரும்பான்மையானோர் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களை வஞ்சிப்பது தவறு.
சம வேலை, சம ஊதியம் என்பதைத் தாண்டி இன்னும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை ஊதியம் கூட இல்லாமல் பணிபுரிந்து வருகிறார்கள். இறந்து போன மூத்த கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான தா .பாண்டியன் உடல்நிலை சரியில்லாத பொழுதும் கூட முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் சென்று கோரிக்கை வைத்தார். அவரும் நிறைவேற்றுவதாக சொல்லிவிட்டு நிறைவேற்றவில்லை. தற்பொழுது தமிழ்நாடு கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர் சங்கத்தின் தலைவராக இருக்கக்கூடிய கிருஷ்ணன் அமைச்சர்களிடம் கோரிக்கை மனுவை கொடுத்தார். இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்னுடைய வேண்டுகோள் இந்த ஏழை எளிய மக்களின் வாழ்க்கை நிலையை தமிழக முதல்வர் மாற்றுவார் என நான் நம்புகிறேன்” என்றார்.