Skip to main content

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்; வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ விளக்கம்!

Published on 26/09/2024 | Edited on 26/09/2024
Advocate NR elango explanation about Bail for Senthil Balaji

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன. அதே சமயம் கடந்த ஓராண்டுக்கு மேலாகச் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு மற்றும் அமலாக்கத்துறை தரப்பு என இரு தரப்பிற்கும் இடையே காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறு இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதியைக் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீதான வழக்கில் இன்று (26.09.2024) காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advocate NR elango explanation about Bail for Senthil Balaji

இதன் மூலம் சுமார் 15 மாதங்களுக்குப் பிறகு (471 நாட்கள்) சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியில் வர உள்ளது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர். இங்கோ செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர் பேசுகையில், “அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் 15 மாதங்களுக்கும் மேலாக விசாரணைக் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சடட வழக்கின் (PMLA Case) விசாரணைகளை நடத்துவதில் நீண்ட கால தாமதம்  ஏற்படலாம். அதோடு செந்தில் பாலாஜி கடந்த 15 மாதங்களாக விசாரணை குற்றவாளியாக இருந்து வருகிறது. இது தொடர்பான அவரின் அடிப்படை உரிமைகளைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது. அதாவது, ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும். ரூ.25 லட்சத்திற்கு 2 நபர்கள் ஜாமீன் கொடுக்க வேண்டும்.

இவ்வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும், குற்றவியல் நடைமுறைகளுக்கு அவர் ஒத்துழைப்பு தரவேண்டும். ரூ.25 லட்சத்திற்கு 2 நபர்கள் ஜாமீன் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிமன்ற தீர்ப்பு நகல் புழல் சிறை அதிகாரிகளுக்குக் கிடைத்தவுடன் இன்று மாலை அல்லது நாளை காலை செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவார். செந்தில் பாலாஜி அமைச்சராகப் பொறுப்பேற்க சட்டப்பூர்வமாக எந்த தடையும் இல்லை” எனத் தெரிவித்தார். அதே சமயம் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து அவரின் சொந்த தொகுதியான கரூரில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புழல் சிறையிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்