தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது.
இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.
அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.