சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் எண்ணம் அதிமுகவில் யாருக்கும் இல்லை என்று என்று முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். சசிகலா தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு, "சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் எண்ணம் எந்த ஒரு அதிமுக தொண்டருக்கும் கிடையாது. அதிமுகவின் தலைமை யார் என்பதற்கு சமீபத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பே சாட்சி. அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களும் எங்கள் முடிவை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அதிமுகவின் தலைமை இபிஎஸ், ஓபிஎஸ் மட்டுமே. அவர்கள் சொல்வதற்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள். ரோட்டில் செல்பவர்களை எல்லாம் தலைமையாக ஏற்க முடியாது.
இந்த 11 மாத திமுக ஆட்சியில், அதிமுக அரசில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை அவர்கள் வேண்டுமென்றே நிறுத்திவிட்டார்கள். ஜெயலலிதா கொண்டுவந்த பல திட்டங்களை வேறு பெயரில் கொண்டு வந்து, தாங்கள் புதிதாகக் கொண்டுவந்ததைப் போல பெருமைப்படுகிறார்கள். சுய சிந்தனையோடு திமுக ஆட்சியில் இதுவரை எந்த ஒரு திட்டமும் கொண்டு வரப்பட்டதாகத் தகவல் இல்லை. அடுத்தவர்களின் திட்டங்களுக்கு தங்கள் பெயரைச் சூட்டிக்கொள்ள விரும்புகிறவர்கள் மக்களுக்கு என்ன செய்ய நினைப்பார்கள். அதிமுக ஆட்சி என்பது எப்போதும் மக்களுக்கான ஆட்சியாக இருந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை" என்றார்.