பல வருடங்களாகவே 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற கூற்றை மத்திய பாஜக அரசு வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் தேர்தல் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 'ஒரே நாடு ஒரு தேர்தல்' என்பதற்கான சட்டத் திருத்தங்களை இந்த சிறப்புக் கூட்டத்தில் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில், “ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கைக்கு அதிமுக அதரவு தெரிவிக்கிறது. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்துகிறது. இது நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்கும் மற்றும் அரசியல் ஸ்திரமின்மையை தவிர்க்கும். ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டால் நேரத்தையும், பெரும் செலவையும் மிச்சப்படுத்தும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் செயல்முறை நமது கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்தால், வளர்ச்சியே ஆட்சியின் முக்கிய மையமாக இருக்கும். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் குழு, நமது நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவாக வலுவான மற்றும் விரைவான முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.