நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவன் எஸ்டேட் பகுதியில் வனத்துறையினருக்குப் போக்குகாட்டி வரும் 'டி23' புலி இதுவரை நான்கு பேரைக் கொன்றுள்ளது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கடந்த ஒன்றாம் தேதி ஒருவரைக் கொன்றதால் புலியைச் சுட்டுக்கொல்ல நேற்று வனத்துறை உத்தரவிட்டது. இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று, முன்பு கொல்லப்பட்ட 3 பேரையும் அந்த புலி உணவாக உட்கொள்ளவில்லை.ஆனால் நான்காவது நபராக இன்று கொல்லப்பட்டவரைப் புலி உண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து 10வது நாளாக 'டி23' புலியைப் பிடிக்க வனத்துறை சார்பில் முயற்சி ஈடுபட்டு வருகிறது. அதேபோல் புலியை மயக்க ஊசி செலுத்தியே பிடிக்க முயன்று வருவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாகக் கும்கி யானைகளை வைத்து புலியைப் பிடிக்கும் முயற்சியை வனத்துறை மேற்கொண்டுள்ளது. இதற்காக முதுமலையில் இருந்து ஸ்ரீனிவாசன், உதயன் என்ற இரண்டு கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்பொழுது புலி பதுங்கி இருப்பதாகக் கூறப்படும் மசினகுடியின் சிங்கார வனப்பகுதி சமதள வனப்பகுதி. ஆனால் அடர் புதர்களைக் கொண்ட வனப்பகுதியாக இருப்பதால் வன கால்நடை மருத்துவர்களைக் கும்கி யானை மீது ஏற்றித் தேடுதல் வேட்டை நடத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 'டி23' புலியைச் சுட்டுக்கொல்ல வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து உத்தரப்பிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்ற பெண் ஒருவர் ஆன்லைன் மூலமாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், குறிப்பிட்ட அந்த புலி ஆட்கொல்லி புலி என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.