அதிமுக, தேமுதிக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில், திடீரென மார்ச் 9ஆம் தேதி மாலை அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக சார்பில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு வெளியான நேரத்தில், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதிஷ் கட்சியினர் மத்தியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியை தரக்குறைவாகப் பேசியதாக கூறப்படுகிறது. அதேபோல் விஜயகாந்த் மகனும் அதிமுக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கடுமையான கண்டனம் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் அப்பகுதி அதிமுகவினர் பலர், காட்பாடி - காங்கேயநல்லூர் கூட்ரோட்டில் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதிஷ் உருவபொம்மையை எரித்து கண்டனம் தெரிவித்தனர். அதோடு பிரேமலதா விஜயகாந்த்தை விமர்சித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதற்கு தேமுதிகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேநேரத்தில் அதிமுகவினர், தேமுதிக சுதிஷ் உருவபொம்மையை எரித்து போராடியுள்ளனர்.