அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடைக்கோரி தொடரப்பட்ட மனு அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால், அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, கடந்த ஜூலை 13- ஆம் தேதி அன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதை உடனடியாக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வில் இன்று (22/07/2022) முறையிடப்பட்ட போது, ஏன் அவசரம் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கட்சிப் பொருளாளர் என்ற பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் மொத வடிவமும் மாற்றப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் மிக முக்கியம் எனவும் விளக்கம் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிடும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.