ஜெயலலிதா கொள்ளையடித்ததாக பேசிய அமைச்சர் மீது வழக்குப்பதிய கோரிய அதிமுக பிரமுகருக்கு, காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை டிடிவி தினகரன் 18 எம்.எல்.ஏ.க்களும் கொடுத்து தக்கவைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர் என பேசி இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சை கண்டு அதிமுகவினரே கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை துணைச்செயலாளர் சீனிவாசன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில், “அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எந்தவித ஆதாரமுமின்றி ஜெயலலிதாவின் பெயருக்கும், புகழுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார். அவர் மீது வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நாளை மறுதினம் (ஜூலை 3) விசாரணைக்கு வர உள்ளதால், அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தநிலையில், அதிமுக பிரமுகர் சீனிவாசனுக்கு, வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுப்பிய சம்மனில், அமைச்சர் மீது வழக்கு பதிய கோரியுள்ளதற்கு, தகுந்த ஆதாரம் ஆவணங்களுடன் ஜூலை 1ம் தேதி காலை 10 மணிக்கு வேடசந்தூர் காவல் நிலையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீனிவாசன் கூறும்போது, சம்மன் தொடர்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞரிடம் ஆலோசித்து, வேடசந்தூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக முடியாது என்பதை தபால் மூலம் இன்ஸ்பெக்டருக்கு தெரிவித்துவிட்டேன். குறிப்பிட்ட அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் உள்ள வேடசந்தூருக்கு வரும்போது, அவராலோ, அவரை சார்ந்தவர்களாலோ என் உயிருக்கு ஆபத்து நேரிட வாய்ப்புள்ளது. எனவே அங்கு வர இயலாது என்பதை தெரிவித்துள்ளேன் என்றார்.