அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை நாளைக்கு (11/08/2022) ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று (10/08/2022) மாலை 04.00 மணிக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது எடப்பாடி தரப்பு வழக்கறிஞர், தொண்டர்கள், நிர்வாகிகள் கோரிக்கையால் பொதுச்செயலாளர் பதவி கலைக்கப்பட்டது என்று வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவது கட்சி விதிகளுக்கு விரோதமானது என்று வாதிட்டார்.
இதற்கு நீதிபதி, பொதுக்குழு கூட்டியதில் கட்சி விதிகள் முறையாகப் பின்பற்றவில்லை எனத் தெரிந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.
எடப்பாடி தரப்பு வழக்கறிஞர், "ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இல்லாவிட்டால் பொருளாளர், தலைமைக் கழக செயலாளர் கட்சியை நிர்வகிக்க விதிகள் வகை செய்கிறது. பொதுக்குழுவுக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் அழைப்பு விடுத்ததில் தவறில்லை. கட்சி விதிப்படி பொதுக்குழுவுக்குத்தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது" என்று வாதிட்டார்.
நீதிபதி, மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கியது ஏன்? என்பதை விளக்கம் வேண்டும். பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா என விளக்கம் தர வேண்டும் என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இருவரால் தற்காலிகமாக நியமித்த தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத்தலைவராகத் தேர்வு செய்வோம். நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை முன்மொழிந்த போது பொதுக்குழுவில் நான் இல்லை. அவைத்தலைவர் அறிவிப்புக்கு முன்பே நான் வெளிநடப்பு செய்துவிட்டேன். தமிழ்மகன் உசேனை முன்மொழியவோ, வழிமொழியவோ இல்லை" என்று வாதிட்டார்.
நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் கட்சி விதிப்படி அவர் நியமிக்கப்பட்டாரா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கு விசாரணையை நாளை (11/08/2022) காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.