அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "சேலம் இடையப்பட்டி அருகே சோதனைச் சாவடியில் வாகன சோதனையின் போது, வெள்ளையன் (எ) முருகேசன் என்ற விவசாயியை நடுரோட்டில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சி அடையச் செய்கிறது. உயிரிழந்த முருகேசனின் குடும்பத்தாருக்கு, எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவல்துறையினர் அப்பாவி விவசாயியிடம் ஈவு இரக்கமற்ற முறையில் நடந்து கொண்டதும், மற்ற மூன்று காவலர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையினரே இப்படி நடந்து கொள்வது வருத்தமளிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணமும், அரசுப்பணியும் வழங்க வேண்டும். முதலமைச்சர் சிறப்புக் கவனம் செலுத்தி "காவல்துறை உங்கள் நண்பன்" என்பதற்கிணங்க மக்களிடம் காவல்துறையினர் மனிதத் தன்மையோடு நடந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.