Skip to main content

‘இபிஎஸ் வழக்கை தள்ளுபடி செய்க’ - உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மனு

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

admk panneerselavam and palaniswami case supreme court

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது. அதே சமயம் அதிமுகவின் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதிமுக சார்பில்  எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

 

இந்த நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பப்படும் வேட்பாளரின் பெயரைத் தலைமைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது என்றும், இதனால் இரட்டை இலை சின்னம் கிடைக்காத சூழல் நிலவியுள்ளதால் இது தொடர்பாக உரிய உத்தரவை வழங்க வேண்டும் என பழனிசாமி தரப்பிலிருந்து உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் 3 நாட்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.  

 

இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருக்கும் சூழலில், பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை ஏற்கக்கூடாது என பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்