அதிமுக சார்பில் அக்டோபர் 6 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரைப் பெற முயற்சி மேற்கொள்ளாமலும், குறுவை சாகுபடியினை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்காத திமுக அரசைக் கண்டித்தும், உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசைக் கண்டித்தும், குறுவை சாகுபடி மேற்கொண்ட சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் கருகிய நெற்பயிர்களுக்கு, ஏக்கர் ஒன்றிற்கு 35 ஆயிரம் ரூபாயை நிவாரணத் தொகையாக உடனடியாக வழங்க வலியுறுத்தியும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய வருவாய் மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டம், சிதம்பரம் வருவாய் கோட்டத்திலும் அதிமுக சார்பில் அக்டோபர் 6 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டமானது திருவாரூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையிலும், கடலூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமையிலும் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.