சென்னையிலிருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காஞ்சிபுரத்திலிருந்து 15 கிலோமீட்டரும் தூரம் கொண்ட பரந்தூரில் இந்த புதிய இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கிறது. பரந்தூர் மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலிருந்தும், நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பரந்தூர் மக்களின் எதிர்பார்ப்பானது விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, அதேபோல் பூர்வ குடிகளாக இருக்கும் தங்களுடைய வீடுகளையோ, மனைகளையோ எந்த வகையிலும் பாதிக்காத அளவில் விமான நிலையம் வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து சுற்றுவட்டார கிராம மக்கள் 'விவசாயத்தை அழித்து விமான நிலையம் தேவையா?' என்ற பதாகைகளுடன் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தை பாமக நடத்த இருப்பதாக அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''சென்னை மாநகரத்தின் இரண்டாவது விமான நிலையம் சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள பரந்தூரில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மொத்தம் 4,800 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையத்தை அமைப்பதற்காக பொதுமக்களிடமிருந்து பெருமளவில் நிலங்கள் கையகப்படுத்தப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால், பரந்தூர் பகுதி மக்களிடம் ஒரு வித அச்சமும், பதற்றமும் ஏற்பட்டிருக்கிறது. தங்களின் நிலங்களை பறிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் அச்சத்தை போக்கி, பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நாளை நடத்துகிறது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அருணா திருமண மண்டபத்தில் நாளை (25.08.2022) வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. அன்புமணி ராமதாஸ் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கப்படவுள்ள அனைத்து கிராம மக்களிடமும் கருத்துகளை கேட்டறிய உள்ளார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.