தமிழக சுற்றுச்சூழல் அமைச்சரும் பவானி தொகுதி எம்எல்ஏவுமான கே. சி. கருப்பணன், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் எனுமிடத்தில் 24ந் தேதி இரவு அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது "மக்கள் சில இடங்களில் ஓட்டை மாற்றிப் போட்டு விட்டனர். அதனால்தான் திமுக சில இடங்களில் வெற்றி பெற முடிந்தது. அவர்கள் வெற்றி பெற்று ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆட்சியில் இருப்பது அதிமுக தான். அந்த உள்ளாட்சிகளுக்கு நாம்தான் நிதி ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு நாம் எதற்கு நிதி ஒதுக்குவோம்?. அப்படியே கொடுத்தாலும் மிகவும் குறைவான நிதி தான் ஒதுக்குவோம். உதாரணமாக காவல்நிலையத்திற்கு பிரச்சனை என்று சென்றால் அதிமுககாரன் சொல்வதை போலீஸ் கேட்பார்களா? இல்லை திமுககாரன் சொல்வதை கேட்பார்களா? அப்படித்தான் இதுவும்" என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
அமைச்சர் கருப்பணன் இந்தப் பேச்சை சத்தியமங்கலம் யூனியன் தலைவராக தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுகவை சேர்ந்த இளங்கோ என்பவர் கண்டித்ததோடு "அமைச்சர் கருப்பணன் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக பேசியிருக்கிறார். அவர் அமைச்சராக பொறுப்பு ஏற்கும் போது ஏற்றுக்கொண்ட உறுதி மொழியை மீறி இருக்கிறார். பாரபட்சமாக செயல்படுவோம் என வெட்டவெளியில் அமைச்சர் பேசியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. திமுகவோ அதிமுகவோ யார் அந்தந்த உள்ளாட்சியில் நிர்வாகத்திற்கு வரவேண்டும் என மக்கள் முடிவு செய்துதான் வாக்களித்து வெற்றி பெற வைக்கிறார்கள். அப்படியிருக்கும்போது அனைத்து உள்ளாட்சி மன்றங்களுக்கும் சமமான அளவில் தான் மத்திய மாநில அரசுகள் நிதி வழங்கி மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆனால் அதிமுக வெற்றி பெற்ற உள்ளாட்சிகளுக்கு அதிக நிதி வழங்குவதாகவும் திமுக வெற்றி பெற்ற உள்ளாட்சிகளுக்கு குறைவான நிதியை தான் வழங்குவோம் என அவர் கூறியிருக்கிறார்.
கருப்பணன் அவர் கட்சியில் ஒருநிர்வாகி என்று மட்டும் விட்டுவிட முடியாது. அவர் அனைத்து மக்களுக்கும் பொதுவான அமைச்சர் அப்படி இருக்கும் போது இவரின் இந்த பேச்சு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த மக்களுக்கு துரோகம் செய்வது போல் உள்ளது. ஆகவே அரசியல் சட்டத்திற்கு முரணான இந்த பேச்சை நாங்கள் எங்கள் தலைமைக்கு கொண்டு சென்று அமைச்சர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வைப்போம்." என நக்கீரன் இணையத்திற்கு 25ந் தேதி பேட்டி கொடுத்திருந்தார்.
இது அதிமுக தலைமைக்குச் செல்ல, அமைச்சர் கருப்பணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக பொருளாளர் துரைமுருகன் மாநில ஆளுநரை சந்தித்து 26ந் தேதி மாலை புகார் மனுவை கொடுத்துள்ளார். அமைச்சர் கருப்பணன், அவர் அமைச்சராக பொறுப்பேற்கும் போது மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு பாரபட்சமில்லாமல் நடப்பேன் என்று சத்தியம் செய்தி ஏற்றுக்கொண்ட உறுதி மொழியை மீறி இருக்கிறார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அமைச்சர் பதவியை இழக்கவும் நேரிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.